மீண்டும் அபராதம்..! மாஸ்க் போடுங்க மக்களே... இறுகும் கொரோனா விதிமுறைகள்..

By Raghupati RFirst Published Jan 3, 2022, 12:01 PM IST
Highlights

உருமாறிய கொரோனா வகையான ஒமிக்ரான் தற்போது நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.  இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் இந்தியாவில் இன்று ஒரேநாளில்  33,750 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ உலக அளவில் பரவி வரும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் இல்லை என்பதால் மக்களிடம் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை மக்கள் அலட்சியமாக எண்ண வேண்டாம். தடுப்பூசி எடுத்துக்கொண்டோம் என்று மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்துவது நல்லதல்ல.மேலும், பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் முழுமையாக அணிவதில்லை. 

குறிப்பாக அதிகாரிகள் யாரையாவது பார்த்தால் மட்டுமே பொது இடங்களில் உள்ள மக்கள் முகக்கவசம் சரிசெய்து கொள்கின்றனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். கட்டுப்பாடு என்பது அதிகாரிகளுக்கு அல்ல மக்களுக்கு என்பதை உணர வேண்டும்.

கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தினோம். நோய்க் கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாகக் கடைப்பிடித்ததே இதற்குக் காரணம். தற்போது அதனை மக்கள் அலட்சியப்படுத்துவதே ஒமைக்ரான் பரவலுக்குக் காரணம் ஒமைக்ரான் பரவல் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தார்.

மேலும், இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில்,  ‘தமிழகத்தில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும்.

கோவிட் கேர் மையங்களை திறந்து தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றாதவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும். விதிமுறையை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதற்கு தயங்காதீர்கள். அனைத்து மாவட்டங்களிலும் வார் ரூம் முழுமையாக செயல்பட வேண்டும்; தேவையான பரிசோதனை மையங்களை திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

click me!