தமிழக அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் முக்கிய துறையாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இத்துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் நகர் மற்றும் புறநகர்ப் பேருந்து சேவைகளை வழங்குகிறது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமானது, “மாநகரப் போக்குவரத்து கழகம் - சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் - தமிழ்நாடு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - சேலம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - மதுரை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி.” ஆகிய 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போக்குவரத்து துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களை நிரப்புதவற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் நீங்கலாக, மற்ற கோட்டங்களில் காலியாக உள்ள 812 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கும்பகோனம் கோட்டத்தில் காலியாக உள்ள 174, சேலம் கோட்டத்தில் 254, கோவை கோட்டத்தில் 60, மதுரை கோட்டத்தில் 136, திருநெல்வேலி கோட்டத்தில் காலியாக உள்ள 188 பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களுக்கான தகுதிகள்
** 10ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
** கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதில் 18 மாதங்கள் அனுபவம் கண்டிப்பாக வேண்டும். அதுதவிர நடத்துனர் லைசென்ஸ் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்
** ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver cum conductor) பணியிடங்களுக்கான ஊதியமாக ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.