மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், “மதுரையில் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு ஏதேனும் முயற்சி எடுத்துள்ளதா? இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு? மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒவ்வொரு துறைக்கும் ஆசிரியர்களை அரசு நியமித்துள்ளதா? ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் யூனியன் அரசு இந்த நோக்கத்திற்காக வழங்கிய நிதியின் விவரங்கள் என்ன?” ஆகிய கேள்விகளை எழுப்பிருந்தார்.
அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் மூல செலவுகளுக்காக ரூ. 69.99 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
undefined
“மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு, எல்லைச் சுவர் கட்டுவது உள்ளிட்ட முதலீட்டுக்கு முந்தைய பணிகள் நிறைவடைந்துள்ளன. திட்ட மேலாண்மை ஆலோசகர் 07.06.2023 அன்று நியமிக்கப்பட்டார். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மூலம் கூடுதல் நிதியுதவி பெறுவதன் கீழ் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதால், திட்டத்தை செயல்படுத்த நேரம் எடுத்தது. ஜப்பான் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே 2021 மார்ச் 26 அன்று கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அமைச்சரவை ஒப்புதல் அளித்தபோது, திட்டச் செலவு ரூ. 1264 கோடியாக இருந்தது. தற்போது திருத்தப்பட்ட செலவு ரூ.1977.8 கோடி என JICA மதிப்பிட்டுள்ளது. இதனை ஆய்வு செய்ய திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டுக் குழுவை அமைச்சகம் அமைத்துள்ளது.” என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மொத்த திட்டச் செலவான ரூ.1977.8 கோடியில், 82 சதவீதத்தை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் இருந்து கடனாக பெறப்படும். மீதமுள்ளவை இந்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும். எல்லைச் சுவர் கட்டுதல் உள்ளிட்ட முதலீட்டுக்கு முந்தைய நடவடிக்கைகளுக்காக இந்திய அரசு ரூ.12.35 கோடியை விடுவித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் மூலதன செலவு ஆகியவற்றிற்காக மொத்தமாக 69.99 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ளது.” என்றும் மத்திய இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னது.. 500 ரூபாய் நோட்டு செல்லாதா? மத்திய நிதியமைச்சகம் சொன்ன பதில் இதுதான்..
“தமிழக அரசின் ஆலோசனையுடன் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள தற்காலிக வளாகத்தில் மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் 50 பேருக்கு MBBS வகுப்புகள் ஏப்ரல், 2022 முதல் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது எம்பிபிஎஸ் படிப்புக்கு 99 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 12 துறைகள் செயல்படுகின்றன.” எனவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை. இந்தியாவின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. அதனால், அந்த மருத்துவமனை கட்டுமானப்பணி ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் கேட்டது. ஆனால், தற்போது வரை நிதி உதவி வராததால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால்தான் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.