கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்ட நிலையில், குடும்பத் தலைவிகளுக்கான உரிமை தொகை திட்டம் மட்டும் தாமதமானது, ஆனால், இந்த திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, திட்டத்துக்கான முதற்கட்ட நிதி விடுவிக்கப்பட்டு, இந்த திட்டத்தினை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என பெயரிடப்பட்டுள்ளது. அதேசமயம், யாரெல்லாம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் என்ற பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு 1.63 கோடி பேர் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியுள்ள குடும்ப பெண்கள் 1.7 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் - ஓ. பன்னீர்செல்வம் ஆவேச பேச்சு
இந்த நிலையில், தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் தொகையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, மகளிர் உரிமைத் தொகையை ரூ.1,000க்கு பதிலாக ரூ.1,500 ஆக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜன.31ஆம் தேதி வரை நீட்டிப்பு!
ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் இது பற்றி அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகவும், பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகை பற்றி முக்கிய அறிவிப்பு வெளியிடப்படள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆட்சி மீதான அதிருப்தியை நீக்கி மகளிர் வாக்குகளை கவரும் வகையில் ஆளும் திமுக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.