
தமிழக கேரளா எல்லையில் கேரளா அரசு மேற்கொள்ளும் நில அளவை பணிக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அதுக்குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக நில அளவை என்ற பெயரில் பல்வேறு இடங்களில் கேரள அரசு தமிழக நிலங்களை தனக்கு சொந்தமானது என பலகைகள் வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுக்குறித்து தமிழக எல்லைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்தன. மேலும் இது தொடர்ந்தால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் இதனை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. அந்த வகையில் தமிழக எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள அரசை தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருந்தார். இதேபோல் தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதியும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக எல்லையில் அத்து மீறி செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து, மறு ஆய்வு பணியினை நிறுத்த சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும் கம்யூனிஸ்டுகளுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்த திமுக அரசு, இப்போதாவது விழித்து கொண்டு தமிழர்களுக்கு கேரள கம்யூனிஸ்ட் அரசு செய்யும் துரோகத்தை தட்டி கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: தமிழக எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரளா.! கை கட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசு- இறங்கி அடிக்கும் சீமான்
மேலும் பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக கேரளா எல்லையில் கேரளா அரசு நில அளவை மேற்கொள்வது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுக்குறித்த தமிழக அரசின் விளக்கத்தில், தமிழ்நாடு கேரள மாநில எல்லையில் கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறுநிலஅளவை பணியினை நவம்பர் 1 ஆம் தேதி முதல் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்பொருள் குறித்து ஏற்கெனவே கடந்த 09-11-2022 அன்று வருவாய்த் துறை அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்கள். இருப்பினும், மீண்டும் இது குறித்து இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது. கேரளா மாநிலம் தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக்குநர் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பொது எல்லையில் அமையப்பெற்ற கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், உடும்பன் சோலை வட்டத்தினை சார்ந்த சின்னக்கானல், சதுரங்கப்பாறை, கருணாபுரம், சாந்தான்பாறை ஆகிய கிராமங்களில் டிஜிட்டல் நில அளவை பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுளதாகவும் அந்த கிராமங்களின் இரு மாநில பொது எல்லைகள் தேனி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளதால் அது தொடர்பான பழைய பதிவேடுகளில் உள்ள பழைய அளவுகளை சரிபார்த்திட கூட்டம் நடத்துவதற்கு தேனி மாவட்டம் நிலஅளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: தமிழக நிலங்களை ஆக்கிரமிக்கும் கேரள அரசு..! கம்யூனிஸ்டுகளுக்கு வெண்சாமரம் வீசும் திமுக- இறங்கி அடிக்கும் பாஜக
அதில், மாநில எல்லைகள் தொடர்புடைய பதிவேடுகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டு கூட்டு ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு உரிய தேதி குறிப்பிட்டு தகவல் தெரிவிக்க கோரப்பட்டிருந்தது. மேற்குறிப்பிட்ட விவரப்படி தொடர்புடைய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு தேதியினை முடிவு செய்து தகவலினை கேரளா மாநிலம் தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக்குநருக்கு கடித வரைவு மூலம் தெரிவிக்கவும், அந்த கூட்டு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்படும். மேலும், இது தொடர்பாக தமிழக கேரள இருமாநில பொது எல்லையில் எவ்விதமான டிஜிட்டல் நிலஅளவை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தேனி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். எனினும், தமிழக வனச்சரகர்களை இரு மாநில பொது எல்லையில் கேரள அரசினால் டிஜிட்டல் நிலஅளவை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்திட தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.