அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை துவங்க ஆளுநர் ரவி அனுமதி அளித்துள்ளார்
அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் மீதான நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு தமிழக அரசிடம் சிபிஐ இசைவு ஆணையை கோரியது. மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐயின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது.
அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர்களான கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரி அதற்கான கடிதங்கள் முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு தமிழக அரசால் அனுப்பப்பட்டன. இதற்கு ஆளுநர் ரவி இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருந்தார்.
undefined
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் எழுதிய கடிதத்துக்கு பதிலளித்த ஆளுநர் மாளிகை, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாகவும், அந்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்தது. மேலும், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான வழக்கில் முறையாக அங்கீகரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் நகலை சமர்ப்பிக்கவில்லை என்றும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்பாக மாநில அரசிடம் இருந்து எந்த கோரிக்கை மனுவோ, கடிதமோ வரவில்லை எனவும் ஆளுநர் மாளிகை அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை பெற்றுக் கொண்டு ஆளுநர் மாளிகை அளித்த ஒப்புகை சீட்டுகள் வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தின. இருப்பினும், வழக்கம்போல முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை துவங்க ஆளுநர் ரவி அனுமதி அளித்துள்ளார். சி. விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க தமிழ்நாடு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல், தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரனிடமும் விசாரனை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தெலங்கானா தேர்தல்: பாஜகவுக்கு கூடுதல் பலம்; மதிகா சமூகம் ஆதரவு!
முன்னதாக, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மூன்றாண்டுகளாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. தொடர்ந்தும் வழக்கின் விசாரணை டிசம்பர் மாதம் 1ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க நீண்ட காலமாக தாமதித்து வந்த ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து விரைவில் வழக்கு தொடர்பாக சிபிஐ நடவடிக்கை வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, 10 சட்ட மசோதாக்களுக்கு அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தவுடன் நீதிமன்றத்தில் கடுமையில் இருந்து தப்பிக்க நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருந்த மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியதாக விமர்சிக்கப்பட்டது. ஆளுநரின் செயலுக்கு பதிலடி கொடுக்கும், சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்டி, அந்த மசோதாக்களில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அதனை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.