Governor RN Ravi : 2 வருடமாக ஆளுநர் என்ன செய்து கொண்டு இருந்தார்.? தமிழக அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

By Ajmal Khan  |  First Published Nov 20, 2023, 1:00 PM IST

சட்ட மசோதா தொடர்பாக கடந்த 10 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 13ம் தேதி மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  
 


ஆளுநருக்கு எதிராக வழக்கு

ஆளுநரின் செயல்பாடுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மற்றும் கேரளா அரசு சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர் வாதிடுகையில்,  தமிழக ஆளுநர் எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் 10 மசோதாக்களை திரும்ப அனுப்பியுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதனையடுத்து அந்த சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அரசு அனுப்பியுள்ளது.  எனவே அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு கால அவகாசம் நிர்ணயம் செய்ய வேண்டும். எனவே ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திடம் வந்து முறையிட முடியாது 7.3 கோடி மக்களுக்கு அரசு பதில் சொல்ல கடமைபட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. 

மசோதா திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது ஏன்.?

இதனையடுத்து தமிழக அரசு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ஏற்கனவே மசோதாக்கள் இயற்றப்பட்டு அனுப்பிய நிலையில் அதனை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது 10 மசோதாக்கள் திரும்ப அனுப்பியுள்ளார்.  அதனை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. இரண்டாம் முறை இயற்றி அனுப்பினால் அதனை Money Bill-லாக தான் பார்க்க வேண்டும். எனவே அதனுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். சட்டமன்றம் இயற்றிய மசோதா தவறாக இருந்தாலும், ஆளுநருக்கு அதனை நிறுத்திவைக்க என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி எழுப்பினார். 

இதனை தொடர்ந்து  தலைமை நீதிபதி கூறுகையில், இந்த மசோதாக்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு திருப்பி அனுப்பப் பட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார். கடந்த 10 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 13ம் தேதி மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  இதனை தொடர்ந்து நீதிபதிகள், அரசியலமைப்பு பிரிவு 200ன் படி ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம், ஒப்புதல் அளிக்காமல் குடியரசு தலைவர் முடிவுக்காக அனுப்பலாம், அல்லது சட்டமன்றத்துக்கு திரும்ப அனுப்பலாம். ஆனால் எந்த முடிவும் எடுக்காமல் மசோதாக்களை ஆளுநர் எப்படி வைத்திருக்க முடியும் என கேள்வி எழுப்பினார். 

மாநில அரசுக்கு எதிராக செயல்படகூடாது

இதற்கு தமிழக அரசு பதில் அளிக்கையில்,  ஆனால் அதே சரத்தில், "கூடிய விரைவில்" என்ற வார்த்தை உள்ளது. எனவே உரிய காரணத்துடன் மசோதாவைத் திரும்ப அனுப்ப வேண்டும் என்பது உள்ளது. ஆனால் தமிழக ஆளுநர் ஒவ்வொரு நிபந்தனையையும் மீறியிருக்கிறார். இதற்கு தலைமை நீதிபதி கூறுகையில், Withold Assent எனக் கூறும் போது அதை மறுபரிசீலனைக்கு அனுப்பலாம் எனக் கருத முடியுமா ?  ஒப்புதலைத் நிறுத்தி வைக்கும் போது, அதை அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமா அல்லது ஜனாதிபதிக்கு அனுப்புகிறேன் என்று கூற வேண்டுமா?  என கேட்டனர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு  வழக்கறிஞர் வாதிடுகையில், மாநில அரசு மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை அடிப்படையில் ஒரு ஆளுநர் செயல்பட வேண்டும். மாநில அரசுக்கு எதிராக அல்ல என தெரிவித்தனர். 

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இதனை தொடர்ந்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், ஆளுநருக்கு உள்ள துணை வேந்தர்கள் நியமன அதிகாரத்தை மாநில அரசு பறிக்க முயல்வதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி கூறுகையில், தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்ட 181 மசோதாக்கள் மீது தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2020 முதல் 2023 வரை  152 மசோதாக்கள் நடவடிக்க எடுக்கப்பட்டு அனுப்பப் பட்டுள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 தற்போது அனுப்பப்பட்டுள்ள  மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க அவருக்கு சற்று அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.  மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க சற்று அவகாசம் வேண்டும் என்ற மத்திய அரசு தலைமை வழக்கறிஞர்  கோரிக்கையை ஏற்று வழக்கு டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதையும் படியுங்கள்

ஆர்.என் ரவி டெல்லி சென்றார் - அமித்ஷாவை சந்திக்க திட்டமா?

 

click me!