வடிவேலு பட காமெடியை போல பழுதான அரசு பேருந்தை பொதுமக்கள் தள்ளு,தள்ளு என்று தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் பவானிசாகர் வழியாக அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல நேற்று காலை தெங்குமரஹடா வனப்பகுதியில் இருந்து பவானிசாகர் வழியாக கோத்தகிரிக்கு அரசு பஸ் வன கிராமங்கள் வழியாக சென்று கொண்டிருந்தது. ‘காராச்சிக்கொரை’ வன சோதனைச்சாவடி பகுதியில் சென்றபோது திடீரென பழுதாகி நின்றது.
பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் அறிவுரையின் பேரில், பஸ்சில் பயணித்த வன கிராம மக்கள் கீழே இறங்கினர். பின்னர் பஸ்சை தள்ளி ஸ்டார்ட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.வடிவேலு படத்தில் வருவது போல, ஏய் தள்ளு..தள்ளு.. தள்ளு.. என்று ரொம்ப நேரமாக தள்ளினர். பேருந்தை தள்ளுவதற்கு பதிலாக நடந்து சென்றிருந்தால் கூட, அவர்கள் வீடு போய் சேர்ந்து இருக்கலாம். அவ்வளவு நேரம் தள்ளி ஒருவழியாக, சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு பேருந்து ஸ்டார்ட் ஆனது. அதன்பின்னர் பஸ் அங்கிருந்து சென்றது.
இதுகுறித்து வனகிராம மக்கள் கூறும்போது, ‘தெங்குமரஹாடா பகுதியில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். இந்த அடர்ந்த வனப்பகுதிக்கு இயக்கப்படும் பேருந்து அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதுவே தொடர் கதையாகிறது. வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்தை நல்ல நிலையில் பராமரிக்க போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.