
ஆண்டுதோறும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வெளியூர்களில் தங்கி பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,768 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "ஜனவரி 11ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை சென்னையிலிருந்து மொத்தம் 10,300 பேருந்துகள் இயக்கப்படும். அதாவது மூன்று நாட்களிலும் சென்னையிலிருந்து ஒரு நாளைக்கு 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படும். சென்னை தவிர பிற ஊரிகளில் இருந்து ஜனவரி 11ஆம் முதல் 13ஆம் வரை 6,468 பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் முடிந்து சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மொத்தம் 16,709 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
டெண்டர் பெறப்பட்ட மோட்டல்களில்தான் அரசு பேருந்துகளை நிறுத்தமுடியும். அதேசமயம் சாலையோர மோட்டல்களில் உணவின் தரம் குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக உணவின் தரம், சுகாதாரப் பிரச்னைகள் குறித்து புகார்கள் உறுதி செய்யப்பட்டால் டெண்டர் ரத்துசெய்யப்படும்’’என்று தெரிவித்தார். மாணர்வர்கள் படிக்கெட்டுகளில் பயணம் செய்வது குறித்து கேட்டபோது, ஆபத்தான முறையில் படிக்கெட்டில் பயணிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.