கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதியன்று தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகரில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை, ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மழைநீர் வெள்ள பாதிப்பு தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் உரையாடி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், ரிப்பன் மாளிகையில் தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, மீட்பு உபகரணங்களையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும் என்றும், மின்தடை ஏற்படக்கூடிய இடங்களில் உடனடியாக மக்களுக்கு எந்தவித இடையூறிமின்றி மின்விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவை கொல்ல சதி? மத்திய அரசு விளக்கம்!
மேலும், தற்போது பெய்துவரும் கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிவுடம், புதிதாக புயல் உருவாகவுள்ளதையொட்டி அதன்பொருட்டு பெய்யும் கனமழையால் அடுத்து வரும் சில நாட்களில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், சாலைகள், சுரங்கப் பாதைகள் இவற்றில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றிட தேவையான மின் மோட்டார்கள் அமைத்திடவும், மழைநீர் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கிடவும்.
அப்பகுதியின் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மேலும், கடந்த இரு தினங்களில் மழைநீர் தேங்கிய இடங்களை குறிப்பாக கண்காணித்து, அங்குள்ள நீரை அகற்றிடவும், மீண்டும் அப்பகுதியில் மழைநீர் தேங்காவண்ணம் உயர்சக்தி மின் மோட்டார்களை வைத்து நீரினை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு பகுதி மக்களிடம் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தினார். அவர்களுக்கு தேவையான உணவு, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்திடவும் அறிவுறுத்தினார்.