மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே தில்லையாடி காளியம்மன் கோயில் தெருவில் அப்பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் உள்ளது. தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று தீப்பற்றியதால் தயாரித்து வைக்கப்பட்டிருந்த வெடிகள் பலத்த சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளர்கள் நான்கு பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வரும் பொறையார் போலீசார், ராமதாஸ் ஃபயர் ஒர்க்ஸ் உரிமையாளர் மோகனை கைது செய்து அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.. பணி நிச்சயம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி !!
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் காவல் சரகம், தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் இன்று (4-10-2023) மதியம் வெடிகளை பார்சல் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், மயிலாடுதுறையைச் சேர்ந்த மதன், மகேஷ் மற்றும் ராகவன் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.