அமைச்சரவை மாற்றம் அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். அப்போது அவருடன் 34 அமைச்சர்கள் இருந்தனர். அந்த சமயத்தில் அமைச்சர்களாக ஸ்டாலின் டிக் அடித்த பெயர்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சராக நியமித்தது பெரிதும் கவனம் ஈர்த்தது. ஸ்டாலின் பொறுப்பேற்ற போதே அமைச்சரவையில் அடிக்கடி மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதுமாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜகண்ணப்பன், சிவசங்கர் ஆகிய 2 அமைச்சர்களின் துறைகள் மட்டுமே மாற்றப்பட்டது. அதிலும், ராஜகண்ணப்பன் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியதால் அவரது துறை மாற்றப்பட்டது. இதனிடையே, அண்மைக்காலமாகவே அமைச்சர்களின் செயல்பாடுகளில் முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக கூறுகிறார்கள். பல மேடைகளில் ஸ்டாலினே இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அமைச்சர்களின் செயல்பாடுகளில் மாற்றம் இல்லை. இந்த பின்னணியில், ஆவடி நாசரின் பதவியை பறித்து முதல்வர் ஸ்டாலின் அதிரடி காட்டினார். அவர் மீதும், அவரது மகனின் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் அவரது பதவி பறிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அதேபோல், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்பட்டது. மிகவும் முக்கியமான நிதித்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறைக்கு அவர் மாற்றப்பட்டார்.
இந்த பின்னணியில், அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோட்டை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்கையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அவர் வகித்து வந்த துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி அல்லது டிஆர்பி ராஜா ஆகியோரில் யாராவது ஒருவரிடம் அளிக்கப்படும் அல்லது செந்தில் பாலாஜியின் பதவிகள் பிரித்து அளிக்கப்படும் என்கின்றனர்.
தயக்கம் காட்டும் சசிகலா: திருமண விழாவில் திருப்பம் ஏற்படுவதில் சிக்கல்!
முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க சென்ற போது இங்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில், சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கள்ளச்சாரயம் விவகாரம், டாஸ்மாக் ஊழல் உள்ளிட்ட விவகாரங்களும் செந்தில் பாலாஜிக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது என்கிறார்கள்.
இதுகுறித்து அரசியல் நோக்கர்களிடம் பேசுகையில், “திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். மக்கள் மத்தியில் திமுகவுக்கான ஆதரவு வட்டம் பெருகுவதை பாஜக விரும்பவில்லை. அதன் ஒருபகுதியாகத்தான் பிடிஆரை காலி செய்தார்கள். இந்தியா அளவில் பிடிஆருக்கு செல்வாக்கு வளர்ந்து திராவிட மாடல் ஆட்சி பற்றி பேசத்தொடங்கினார்கள். எனவே, அவரை கட்டம் கட்டும் முயற்சிகள் நடந்தன. அதற்கு ஸ்டாலின் இரையாகி விட்டார். முடிவில் பிடிஆரின் பதவி பறிக்கப்பட்டதுதான் மிச்சம். அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் பிடிஆர் இணக்கமாக செல்லாமல் கறாராகக்கூட இருந்திருக்கலாம். அதற்காகக் கூட நிதிகளை விடுவிக்கும் பொறுப்பு அவர் வசம் இருந்து தங்கம் தென்னரசுவுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பிடிஆர் ஆடியோ வெளியானது அவர் பதவி பறிப்பு ஏற்றுக் கொள்ளமுடியாது. காலம்தாழ்த்திக் கூட இந்த துறை மாற்றத்தை ஸ்டாலின் செய்திருக்கலாம். இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றியாக இருக்கலாம், ஆனால், மக்கள் மத்தியில் திமுகவுக்கு இது அதிருப்தியையே ஏற்படுத்தியது.” என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், “அதேபோல், பாஜகவினர் தற்போது செந்தில் பாலாஜியை கட்டம் கட்டுகின்றனர். சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துருவாக்கம் செய்யப்படுகிறது. திமுக வீக்காக இருந்த கொங்கு மண்டலத்தில் கட்சியின் செல்வாக்கை மீட்டெடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. கொங்கு பெல்ட் என்பது பாஜகவுக்கு வாக்குவங்கி இருக்கும் இடம். அதிமுகவின் செல்வாக்கும் செந்தில் பாலாஜி வருகைக்கு பின்னர் குறையத் தொடங்கியுள்ளாது. எனவே, மக்களவை தேர்தல் நெருங்குவதால் அவரை பற்றிய எதிர்மறையான பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக இருக்கலாம். டாஸ்மாக்கில் குவாட்டருக்கு ரூ.10 அதிகமாக விற்பது செந்தில் பாலாஜி அமைச்சரான உடனேயே நடக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சி காலத்திலும் அதிகமாகத்தான் விற்றார்கள். இவை அனைத்தும் ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. கட்சியை பலப்படுத்துவது, அமைச்சராக செயல்பாடுகள் என செந்தில் பாலாஜியை பொறுத்தவரை ஸ்டாலினின் குட்புக்கில்தான் இன்னமும் இருக்கிறார். எனவே, அவரது பதவி பறிக்கப்பட வாய்ப்பில்லை.” என்கிறார்கள் திட்டவட்டமாக.