“மோடி எதுவும் செய்யவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆறு முறை ஆட்சிக்கு வந்தும் தனுஷ்கோடிக்கு திமுக எதுவும் செய்யவில்லை. ஆனால் பிரதமர் 70 கோடி செலவில் தனுஷ்கோடிக்கு ராமேஸ்வரத்திற்கும் சாலையை அமைத்து தந்தார்” என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
நாகர்கோயிலில் இன்று பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ நாகர்கோயில் கன்னியாகுமரியில் முதன்முதலாக மதத்தை வைத்து அரசியலை கருணாநிதி கொண்டு வந்தார். இந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என இரண்டாக பிரித்து திமுக ஓட்டு கேட்க ஆரம்பித்தது. கருணாநிதி ஒரு முறை நெல்லை தான் எங்கள் எல்லை குமரி எங்களுக்கு தொல்லை என்று கூறினார்.
ஆகையால் திமுக ஆட்சியின் பொழுதெல்லாம் குமரியில் வளர்ச்சி குறைவாகவே இருக்கிறது. 1971 தேர்தலில் நீங்கள் தோற்கடித்த கோபத்தை திமுக இன்னும் மறக்கவில்லை. கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் ஐயா அவர்களின் கட்டிடத்தை இடித்து அதற்கு கருணாநிதி அவர்களின் பெயரை சூட்ட பார்த்தார்கள். நமது போராட்டத்தினால் மீண்டும் அதற்கு என் எஸ் கிருஷ்ணா அரங்கம் என பெயர் சூட்டப்பட்டது.
1977 இல் இந்திரா காந்தி அவர்கள் தமிழகம் வரும்பொழுது உயிருக்கு ஆபத்து வரும் அளவிற்கு திமுகவினர் களங்கம் ஏற்படுத்தினர். இந்திரா காந்தி அவர்களுக்கு குருதி வந்த பொழுது பெண்ணென்று இருந்தால் மாதம் குருதி வரும் என பெண்ணினத்தையே கேவலப்படுத்திய பிறவி திமுக. திமுக ஒரு மானம் கெட்ட கூட்டம். அதற்கு தலைவனான மு.க ஸ்டாலின் அவர்களுக்கு பிரதமர் மோடியை பற்றி பேச தகுதி இல்லை.
மோடி எதுவும் செய்யவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆறு முறை ஆட்சிக்கு வந்தும் தனுஷ்கோடிக்கு திமுக எதுவும் செய்யவில்லை. ஆனால் பிரதமர் 70 கோடி செலவில் தனுஷ்கோடிக்கு ராமேஸ்வரத்திற்கும் சாலையை அமைத்து தந்தார். துண்டு சீட்டு ஸ்டாலின் என கூறுவார்கள். எனவே பிறர் எழுதியதை படிக்காமல் நீங்களாக சுயபுத்தியை பயன்படுத்தி தனுஷ்கோடியில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
2004 - 14 வரை 85 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்பொழுது ராமேஸ்வரத்தில் கூட்டம் போடாத ஸ்டாலின் எதற்காக இன்று ராமநாதபுரத்தில் மீனவர்களை வைத்து கூட்டம் போடுகிறீர்கள். முதல்வர் ஸ்டாலினின் துண்டு சீட்டு காற்றில் பறந்தால் I.N.D.I.A கூட்டணியில் விளக்கம் கூட அவருக்கு சொல்ல தெரியாது. மீனவர்களும் விவசாயிகளுக்கான கிசான் அட்டையை பெற்றுள்ளனர்.தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் மீது உள்ள கடன் 352000 ரூபாய் ஆகும்.
தமிழகம் கடன் வாங்குவதிலும், குடிப்பதிலும் நம்பர் ஒன்னாக உள்ளது. சென்ற ஆண்டை விட டாஸ்மாக் வரவு 22 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. வேற எதுவும் தமிழகத்தில் 22 சதவீதம் உயரவில்லை. திமுகவினரின் சாராய ஆலை வாழ்வதற்காக ஏழை மக்களின் குடும்பத்தை சீரழிக்கிறார்கள். பொன்னார் அவர்கள் 2014-19 வரை கொண்டு வந்த 48000 கோடி நிதியில் 30000 கோடி வரை மீதம் இருக்கிறது.
மீனவர்களுக்கு வீடு கட்டித் தரவில்லை, மீன்பிடி படகு தொழிற்சாலை, ரப்பர் ஆலை , தகவல் தொழில்நுட்ப பூங்கா, நாகர்கோவிலில் தொழிற்பேட்டை போன்ற பலவற்றை இன்னும் திமுக செய்யவில்லை. திமுக மத்திய அரசு செய்யும் அனைத்தையும் தமிழகத்திற்கு எதிராக திருப்பிவிட பார்க்கிறார்கள். எதிரிகள் பொய்களை சத்தமாக பேசும் பொழுது தேசபக்தர்கள் உண்மையை கம்பீரமாக பேச வேண்டிய காலம் இது” என்று அண்ணாமலை கூறினார்.