தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் நாளை மறுநாள் கூட்டப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது
பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுப்பதாகவும், எதிர்க்கட்சி அரசுகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்வதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதனிடையே, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், “தமிழ்நாடு மாநில சட்டமன்றம் அவரது ஒப்புதலுக்காக அனுப்பிய மாநில அரசின் கோப்புகள், உத்தரவுகள் மற்றும் கொள்கைகளை ஆளுநர் பரிசீலிக்காதது அரசியலமைப்பிற்கு எதிரானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, நியாயமற்றது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது, 12 மசோதாக்கள், 3 துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் 4 நடவடிக்கை உத்தரவுகள், 54 கைதிகளின் முன்கூட்டிய விடுதலை தொடர்பான கோப்புகள், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமன கோப்பு உள்பட அரசு பணிகளில் முக்கியமான 14 காலிப்பணியிடங்களில் 10 பணியிடங்கள் ஆளுநரால் நிரப்பப்படாமல் உள்ளன எனவும் தமிழ்நாடு அரசு தரப்பு சுட்டிக்காட்டியது.
இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், 10 சட்ட மசோதாக்களுக்கு அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதாக்கள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு ஆளுநர் கூறியிருக்கிறார்.
இதனால், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, ஆளுநர் திருப்பி அனுப்பிய பத்து மசோதாக்களும் திருத்தமின்றி மீண்டும் அப்படியே நிறைவேற்றி அவருக்கு மீண்டும் அனுப்பப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும், “விதிப்படி, ஆளுநர் ஒரு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினால், மீண்டும் அந்த மசோதாவை அரசு நிறைவேற்றிக் கொடுத்தால், நிச்சயமாக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த நடைமுறை அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்கு அவர் அனுமதி கொடுக்க மறுக்கிறார்.” எனவும் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி (நாளை மறுநாள்) கூட்டப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் கூடவுள்ளது. இதற்கான அறிவிப்பை பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார்.
இந்த சிறப்பு கூட்டத்தொடரின் போது, ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.