சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆகிறார் டி.கே.ராஜேந்திரன்? – குறுக்கு வழியில் கொண்டு வரப்படுகிறாரா?

First Published Jun 30, 2017, 10:12 AM IST
Highlights
tk rajendran next dgp


தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்படலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிகின்றன.
டி.கே.ராஜேந்திரன் நியமனத்தில் அனைத்து விதிகளும் மீறப்படுவதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி ஆக இருக்கும் உளவுத்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்று மதியத்துடன் ஓய்வு பெறுகிறார்,
அடுத்து சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக அடுத்த இரண்டு ஆண்டுகள் பணிபுரியும் வகையில் ஒருவரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் அல்லது தற்போதுள்ள பொறுப்பு டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு தற்காலிகமாக 3 அல்லது 6 மாதம் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்.இந்த இரண்டு வாய்ப்புகள் மட்டுமே தமிழக அரசின் முன் உள்ளது.

இதற்கிடையே பான், குட்கா விவகாரத்தில் லஞ்சம் வாங்கியதாக வெளியான பட்டியலில் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் பெயர் உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து ஊடகங்களில் அடுத்த டிஜிபியாக இவர்களுக்கு வாய்ப்பில்லை என்ற கூறப்பட்டது.
தற்போது அர்ச்சனா ராமசுந்தரம், ராதாகிருஷ்ணன், கே.பி.மகேந்திரன் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் என 5 டிஜிபிக்கள் உள்ளனர்.
இதில் மகேந்திரன் தவிர மற்ற 4 பேரும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெற்று விடுவர்.

தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபி போட்டியில் அர்ச்சனா ராமசுந்தரம், ராதாகிருஷ்ணன், கே.பி.மகேந்திரன் ஆகியோர் உள்ளனர்.

தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி ஆக ஒருவர் வர வேண்டும் என்றால் சீனியாரிட்டி அடிப்படையில் முதல் மூன்று இடத்தில் இருப்பவர்களில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும்.

இதில் நேற்று வரை டி.கே. ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது. அவர் குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ளதால் அவர் பெயரை பரிசீலிக்க மாட்டார்கள். முறைப்படி மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரில் ஒருவரை தேர்வு செய்வார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் டெல்லி வட்டார தகவல்களை விசாரித்த போது டி.கே.ராஜேந்திரனை கொண்டு வருவதில் அதிவேகம் காட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதற்காக நடைமுறையில் இல்லாத வழியை பின்பற்றுவதாக தெரிவிக்கின்றனர்.
அனைத்து நடைமுறைகளையும் தாண்டி டி.கே.ராஜேந்திரன் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்யபட்டார் என்றும் அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டிஜிபியாக தொடர்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக தேர்வு செய்யப்படுவதன் மூலம் நேர்மையான அனைத்து விதிகளும் உடைக்கபட்டு விதிமீறல்களை துணிச்சலாக தமிழக அரசு செய்துள்ளது என்று ஓய்வு பெற்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இது பற்றி கருத்து தெரிவித்த அவர் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி.

அதன் படி அர்ச்சனா,மகேந்திரன்,ராதாகிருஷ்ணன், இவர்களில் ஒருவர்தான் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வரமுடியும்.
ஒரு வேலை டி.கே.ராஜேந்திரனை அரசு கொண்டு வர விரும்பினால் அவருக்கு பணி நீட்டிப்பு மட்டுமே வழங்க முடியும். ஆனால் டி.கே.ராஜேந்திரன் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கொண்டு வர விரும்பும் தமிழக அரசு குறுக்கு வழியை கையாண்டுள்ளது.

டிஜிபியாக தகுதி பெற்றுள்ள ஏடிஜிபி ஜாங்கிட்,திரிபாதி ஆகியோருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி 6 பேர் கொண்ட பெயர் பட்டியலை சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு பரிந்துரை செய்து அதிலிருந்து ஒருவரை தேர்வு செய்வது போல் ராஜேந்திரனை தேர்வு செய்துள்ளனர்.

இது அப்பட்டமான விதிமீறலாகும். ஒருபுறம் ஜூனியர் அதிகாரி மறுபுறம் குட்கா விவகாரத்தில் பெயர் அடிபடுகிறது.
இதை பரிசீலிக்காமல் டி.கே ராஜேந்திரன் வருவது மூலம் விதிகளை தமிழக அரசு மீறியுள்ளது என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா கூட இத்தகைய செயலை செய்ய துணிந்ததில்லை ஆனால் எடப்பாடி பழனிசாமியின் அரசு துணிச்சலாக விதிகளை மீறி ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது.

டிகேஆர் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக நியமிக்கப்படும் பட்சத்தில் மற்ற சீனியர் அதிகாரிகளோ அல்லது பொதுமக்களில் ஒருவரோ இதற்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அணுக வாய்ப்புள்ளது. 

அப்போது நீதிமன்றம் மேற்கண்ட விவகாரங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொண்டால் டி.கே.ராஜேந்திரனுக்கு  சிக்கல் உருவாகும் என்று அந்த ஓய்வு பெற்ற அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் டி.கே.ராஜேந்திரனை  தேர்வு செய்வற்கான உத்தரவு நகலில் கையெழுத்து பெறுவதற்காக கவர்னரை சந்திக்க தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் மகாராஷ்டிரா சென்றுள்ளார்.கவர்னர் கையெழுத்திடும் பட்சத்தில் அறிவிப்பு வெளியாகலாம். 

click me!