
ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து விசைத்தறியாளர்கள் மூன்றாவது நாளாக வேலை நிறுத்தம் செய்ததோடு வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் எதிர்ப்பை காட்டினர்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யின் படி நெசவு ரகங்களுக்கு ஐந்து நிலைகளில் வரி விதிக்கப்படுகிறது. மேலும், வாங்கும் பொருட்கள் குறித்த விவரத்தை மாதம் மூன்று முறை வணிகவரித் துறையில் ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து விசைத்தறி தொழிலாளர்கள் கூட்டம் நடத்தி மூன்று நாள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர்.
இதன்படி கடந்த 27-ஆம் தேதி வேலைநிறுத்தம் தொடங்கியது. நேற்று மூன்றாவது நாளாக நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் விருதுங்கர் மாவட்டம் முழுவதும் உள்ள 17 ஆயிரம் விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர்.
அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள ஏராளமான விசைத்தறி கூடங்கள் மூன்றாவது நாளாகவும் மூடப்பட்டன. நேற்று முன்தினம் ஊர்வலமாக சென்று நெசவு ரகங்களுக்கு விலக்கு அளிக்கக் வேண்டும் என்று தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
நேற்று ஜி.எஸ்.டி.க்கு, விசைத்தறியாளர்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
விசைத்தறியாளர்களின் இந்த வேலைநிறுத்தத்தால் வணிகர்கள், நுகர்வோர் என ஏராளமானோர் நேரடியாகவும். மறைமுகமாகவும் பாதிக்கபட்டனர்.