
செஞ்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு டாக்டர்கள், செவிலியர்கள் யாரும் வராததால் செல்போனில் பேசியபடியே துப்புரவுப் பணியாளர்கள் பிரசவம் பார்த்ததால் பிறந்த சில நிமிடங்களில் குழந்தை இறந்தது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள தேவதானம்பேட்டையைச் சேர்ந்தவர் நேருஜி மனைவி அம்சா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அம்சாவை அவரது உறவினர்கள் பிரசவத்திற்காக நேற்று காலை செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிற்பகல் மூன்று மணிக்கு அம்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்து, சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டதாக துப்புரவுத் தொழிலாளர்கள் அம்சாவின் உறவினர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது அவரது உறவினர்கள் மருத்துவர்களும், செவிலியர்களும் பிரசவம் பார்க்க வராததால், துப்புரவுத் தொழிலாளர்கள்தான் அம்சாவுக்கு பிரசவம் பார்த்தனர். அதனால்தான் குழந்தை இறந்துவிட்டதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனை எதிரே செஞ்சி - திண்டிவனம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த செஞ்சி காவல் ஆய்வாளர் அரிகிருஷ்ணன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட அம்சாவின் உறவினர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அம்சாவின் அண்ணன் உதயசங்கர் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், “தனது தங்கையை மருத்துவமனையில் அனுமதித்ததில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வந்து சிகிச்சை அளிக்கவில்லை.
இதனால் நான் எனது தங்கையை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் என்று அங்கிருந்த துப்புரவு தொழிலாளர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் நாங்களே பிரசவம் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு எனது தங்கைக்கு செல்போனில் பேசியபடியே பிரசவம் பார்த்தனர். பின்னர், சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறந்து, இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
துப்புரவுத் தொழிலாளர்கள் பிரசவம் பார்த்ததால்தான் குழந்தை இறந்துவிட்டது. அதனால் குழந்தையின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.
அதன் புகாரின் பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.