
தமிழக அரசின் சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சரின் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா மதுரையில் இன்று தொடங்குகிறது. வரும் ஜனவரி மாதம் வரை தமிழகம் முழுவதும் தொடர்ந்து விழாக்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு தொடக்க விழா மதுரையில் இன்று மதியம் 2:00 மணிக்கு துவங்குகிறது. மதுரை ரிங் ரோடு பாண்டி கோயில் பகுதியில் உள்ள அம்மா திடலில் இந்த விழா நடைபெறவுள்ளது.
லட்சுமண் ஸ்ருதி இன்னிசை, யோகி ராமலிங்கம் தலைமையில் யோகா நிகழ்ச்சிகள், முனைவர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம், நாட்டிய கலாலயாவின் பரதநாட்டியம் , மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
விழாவை, மதுரையில் ஏழு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாகனங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் தொடக்க விழாவையடுத்து வரும் ஜனவரி மாதம் வரை தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை அரசு நடத்த உள்ளது.