
சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக திருநங்கை பிரித்திகா யாசினி இன்று பொறுப்பேற்றார்.
சேலம் கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கலை யரசன். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதியரின் 2 வாரிசுகளில் பிரித்திகா யாஷினி திருநங்கை ஆவார்.
பிரித்திகா யாசினி, காவல்துறை அதிகாரி தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை ஆவார். இவர் ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறினார்.
பிசிஏ பட்டம் முடித்துள்ள இவர் கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்று தேர்வானார்.
அதன் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றார். அவருக்கு மாநகர போலீஸ் ஆணையர் சுமித்சரண் கடமை நியமன ஆணையை, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கினார்.
இதையடுத்து ஓராண்டாக வண்டலூர் அருகே உள்ள தமிழ்நாடு போலீஸ் உயர் பயிற்சி நிலையத்தில் யாசினி பயிற்சி பெற்று வந்தார்.
பின்னர் பிரித்திகா யாசினி தருமபுரியில் காவல் உதவி ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், தற்போது, சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக அவர் பொறுப்பேற்றுள்ளார்.