
விருதுநகர்
விருதுநகரில், அனைத்துப் பகுதிகளுக்கும் சீராகக் குடிநீர் வழங்க விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சியில் சுமார் 8000 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பெரியகண்மாயின் பேரீச்சம்பழ ஊற்று எனும் இடத்தில் நகராட்சி மூலம் ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் பெறப்படுகிறது.
இந்த நீரே திருச்சுழி ஊராட்சி முழுமைக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நீர் பகுதி வாரியாக சுமார் ஐந்து நாள்களுக்கு ஒருமுறை எனும் வீதம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், காவல்நிலையம் பின்புறம் உள்ள கிழக்குத்தெரு, ரத வீதிகள் உள்ளிட்ட பல இடங்களிலும் குடிநீர் கிடைப்பதில்லை.
இதற்கு மேற்கூறிய பகுதிகள் மேடாக இருப்பது ஒரு காரணமாம். அதற்கு அப்பகுதியில் கூடுதல் சக்தி மோட்டார்களை தனியே ஊராட்சி நிர்வாகம் அமைத்துவிட்டால் குடிநீரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் சீராக வழங்கலாம் என்று மக்கள் கருதுகின்றனர்.
மேலும், வழக்கமாக வழங்கப்படும் குடிநீரும் மொத்தமே சுமார் ஒன்றரை மணிநேரம் மட்டுமே விநியோகம் செய்யப்படுவதால் அந்நேரத்திற்குள் ஐந்து நாள்களுக்குத் தேவையான குடிநீரைப் பிடித்து சேமிக்க முடிவதில்லை என்றும் அவர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இதனால் மக்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க அதிக விலை கொடுத்து தனியார் நிறுவன நீரை வாங்கிப் பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, "கூடுதல் நேரம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
கிழக்குத்தெரு, ரத வீதிகள் உள்ளிட்ட மேடான பகுதிகள் உள்பட அனைத்துப் பகுதிகளுக்கும் சீராகக் குடிநீர் வழங்க விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.