
நாகர்கோவில்
இராமேசுவரம் மீனவர் டிரிட்ஜோவை சுட்டுக்கொன்ற இலங்கை அரசிடம் இருந்து வருவாய் இழப்பாக ஒரு கோடி ரூபாய் பெற்றுத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களை கருப்பு துணியால் கட்டி இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மீனவர் பேரவை, தமிழ்நாடு மீனவர் பேரவை மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் நேற்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டனர். இவர்களுக்கு தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீனவர் பேரவை குமரி மாவட்ட தலைவர் ஜோர்தான் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு மீனவர் பேரவையைச் சேர்ந்த கென்னடி, தேசிய மீனவர் பேரவையைச் சேர்ந்த கிறிஸ்டி, குமரி மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆன்றோ லெனின், குமரி மாவட்ட மீனவர் சங்கத்தைச் சேர்ந்த ஆன்ட்ரூஸ், தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் ஜெசோமேரி உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
இரமேசுவரம் மீனவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கண்களை கருப்புத்துணியால் கட்டிக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், “7–3–2017 அன்று தங்கச்சிமடம் மீனவர் டிரிட்ஜோ இலங்கை கடற்படையால் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த மனிதாபிமானமற்ற இலங்கை கடற்படையின் வெறிச்செயலுக்கு தெற்காசிய மீனவ தோழமையும், மற்ற மீனவ அமைப்புகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறது.
இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலை ஐக்கிய நாடு சபை வழியாக மத்திய அரசு கண்டிக்க வேண்டும்.
டிரிட்ஜோ சுட்டு கொல்லப்பட்டதால் அவரது குடும்பத்தினர் நிரந்தரமாக வருமானத்தை இழந்துள்ளனர். எனவே மத்திய அரசு டிரிட்ஜோவை சுட்டுக்கொன்ற இலங்கை அரசிடம் இருந்து வருவாய் இழப்பாக ஒரு கோடி ரூபாயும், மேலும் இலங்கை கடற்படையால் இதுவரை சுட்டுக்கொல்லப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களுக்கும், தலா ஒரு கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு வழங்க வலியுறுத்த வேண்டும்.
பாரம்பரியமாக இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வந்த பாக் ஜலசந்தியில் அமைதியாக மீன்பிடித்தொழில் செய்ய மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இந்தியாவுக்கு சொந்தமான, பாரம்பரியமாக இருந்து வந்த கச்சத்தீவை உடனடியாக மீட்க வேண்டும்.
மீனவர் டிரிட்ஜோவின் இறப்பினால் ஏற்பட்ட துக்கத்தில் இருப்பதால் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவை இப்போது எங்களால் கொண்டாட இயலாத நிலையில் உள்ளோம்.
எனவே கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவை வேறு நாளுக்கு மாற்றி வைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.