
மதுராந்தகம் தொகுதிக்கு உள்பட்ட வேடந்தாங்கல், வெள்ளபுத்தூர், சிலாவட்டம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை, நாற்றுப் பண்ணை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை காஷ்மீர் மாநில அமைச்சர் அப்துல் ஹக் கான் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர் நேற்று நேரில் பார்வையிட்டனர்.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளபுத்தூர், வேடந்தாங்கல் மற்றும் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், சிலாவட்டம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை, நாற்றுப் பண்ணைப் பணிகள், இயற்கை உரம் தயாரித்தல், மண்புழு உரம், பசுமைக் குடில் பணிகள், சாலையோரம் மரம் நடுதல் போன்ற பணிகளை நேரில் பார்வையிட காஷ்மீர் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் அப்துல் ஹக் கான், ஊரக சுகாதாரப் பிரிவு இயக்குநர் ரகுமான் காசி ஆகியோர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை மதுராந்தகம் வந்தனர்.
அவர்களுக்கு இப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநர் ஜெய்குமார் விவரமாக எடுத்துரைத்தார்.
இதில், மாவட்ட செயற்பொறியாளர் தணிகாசலம், உதவி செயற்பொறியாளர் விக்டர் அமல் ராஜ், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராம் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஸ்டெல்லா பாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.