
கௌந்தப்பாடி
மூன்று மாதங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகிக்கப்படாததால், சீரான குடிநீர் விநியோகம் கேட்டு கௌந்தப்பாடியில் வெற்றுக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கௌந்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்டது நேரு நகர், வாய்க்கால் மேடு, ஜெ.ஜெ. நகர் ஆகிய பகுதிகள். இங்கு 500–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு உள்ளவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் இங்குள்ளவர்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேரு நகர், வாய்க்கால் மேடு, ஜெ.ஜெ. நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெற்றுக் குடங்களுடன் கௌந்தப்பாடியில் உள்ள சத்தியமங்கலம் – கோபி சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.
இதுபற்றி அறிந்ததும் கௌந்தப்பாடி காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘உங்கள் பகுதிக்கு குடிநீர் சீராக விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று காவலாளர்கள், பொதுமக்களிடம் சமாதானம் பேசினர்.
இந்தப் பேச்சில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக, குடிநீர் இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் மக்கள், தண்ணீர் கேட்டு போராட்டத்தில் இறங்கியது கௌந்தப்பாடியில் பரபரப்பு ஏற்படுத்தியது.