பொதுமக்கள் 50%; அரசு 50%; குளங்களை தூர்வார அக்ரிமெண்ட்…

First Published Mar 11, 2017, 8:42 AM IST
Highlights
50 of the population Government 50 Agreement turvara tanks


திண்டுக்கல்

தன்னிறைவு திட்டத்தின் மூலம் பொதுமக்கள் 50 சதவீத பங்களிப்பும், அரசு 50 சதவீத பங்களிப்பும் அளித்தால் குளங்களை தூர்வார முடியும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார்.

அப்போது, அவர் பேசியது:

“திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 50 சதவீதத்துக்கும் மேல் மழை பொய்த்ததால், நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. சில வட்டாரங்களில் 100 ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் பயனில்லை.

தற்போதைய சூழலில் இனி வரும் மழையை முழுமையாக சேமிப்பது அவசியமாகிறது. இதற்கு மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள், கண்மாய்கள், வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும்.

ஏற்கனவே அரசு சில குளங்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதுபோக மற்ற குளங்களையும் தூர்வார வாய்ப்பு இருக்கிறது. இதற்கு பொதுமக்கள், தன்னார்வலர்களின் பங்களிப்பு அவசியம்.

அதாவது, தமிழக அரசு மூலம் தன்னிறைவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களோ அல்லது தனிநபரோ 50 சதவீத பங்களிப்பை அளித்து, மீதம் உள்ள 50 சதவீத பங்களிப்பை அரசின் மூலம் பெற்று பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் குளங்களை தூர்வார முடியும்” என்று அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, வேளாண்மைத்துறை தொழில்நுட்ப பிரிவு உதவி பொறியாளர் பிரிட்டோ பேசினார்.

அப்போது, அவர் தெரிவித்தது:

“திண்டுக்கல் மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து 250 மீட்டர் முதல் 1400 மீட்டர் வரை உயரத்தில் உள்ள பகுதிகளைக் கொண்டது. அதாவது, நாம் மிகவும் மேடான இடத்தில் இருக்கிறோம். இதனால் நிலத்தடி நீரை தக்க வைப்பதில் சிரமங்கள் உள்ளன.

மேலும், கடந்த ஆறு ஆண்டுகளில் 40 சதவீதமே மழை பெய்துள்ளது. இதை தவிர்க்க மரம் வளர்க்க வேண்டியது அவசியமாகும்.

மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 436 குளங்கள் இருக்கின்றன. சுமார் 2 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வரத்து கால்வாய்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தூர்ந்து போய்விட்டன. குறிப்பாக, 10 அடி அகலம் இருந்த வரத்து கால்வாய்கள் 5 அடி அகலம் கொண்டதாக சுருங்கிவிட்டன.

இதுபோன்ற காரணங்களினால் பெய்யும் மழை நீர் நேரடியாக குளங்களுக்கு செல்லாமல் வீணாகிகின்றன. குளங்களை இணைக்கும் வரத்து கால்வாய்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

நீர் ஆதாரத்தைப் பெருக்க முதலில் நீரோடைகளை கண்டுபிடிக்க வேண்டும். பிறகு, நீரோடைகள், வரத்து கால்வாய்கள், குளங்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதில் இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

ஒரு குளத்தை தூர்வார ரூ.1½ லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவாகும். ஒரு கிலோ மீட்டர் நீள வரத்துகால்வாயை சீரமைக்க ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை தேவைப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

click me!