
ஆனைமலை
ஆனைமலை அருகே பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உயிர்த் தண்ணீர் திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிடும் அதனை செயல்படுத்தாத பொதுப்பணித்துறையை முற்றுகையிட்டும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் நடத்திய விவசாயிகள் 90 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணையின் மூலம் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு மற்றும் கேரள மாநில நீர்ப்பாசனப் பகுதிகள் பயனடைகின்றன.
ஆனைமலை பகுதியில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் உள்ளன. பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தின் கீழ் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆண்டுக்கு 315 நாள்கள் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது ஒப்பந்தம்.
கடந்த ஆண்டு பருவ மழை சரிவர பெய்யாததன் விளைவாக பழைய ஆயக்கட்டு பாசனத்தின் 2–ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெறவில்லை.
மீதமுள்ள 3 ஆயிரத்து 400 ஏக்கரில் தென்னை, கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தன. இந்த பயிர்கள் கருகுவதை தடுக்க உயிர்த் தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் ஆழியாறு அணையில் தண்ணீர் இல்லை என்று கூறி பொதுப்பணித் துறையினர் திறக்க மறுத்து விட்டனர். இதையடுத்து பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாமல், பொதுப்பணித் துறையினர் தண்ணீர் திறக்க மறுத்து விட்டனர்.
இதையடுத்து நேற்று வேட்டைக்காரன்புதூரில் உள்ள பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு பாசன சபை தலைவர் அசோக் சண்முக சுந்தரம் தலைமையில் விவசாயிகள் தண்ணீர் திறப்பது குறித்த தகவல் அறிய சென்றனர்.
அங்கு யாரும் இல்லாமல் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அங்கேயே தரையில் அமர்ந்து இருந்தனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் பொள்ளாச்சி –சேத்துமடை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜன், ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சாலை மறியலை கைவிட மறுத்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 90 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.