
கோவை
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தீர்த்த குண்டத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி எஞ்சினியரிங் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கனியாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (21) என்பவர் வேலூரில் ஒரு தனியார் எஞ்சினியரிங் கல்லூரியில், பி.இ.சிவில் எஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தனது நண்பர்கள் சிலருடன், வியாழக்கிழமை கோவைக்குச் சுற்றுலா வந்தார். பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு நேற்று கோவை வெள்ளிங்கிரி பகுதியில் இருக்கும் ஈஷா யோகா மையத்திற்குச் சென்றனர்.
அவர்கள், அங்குள்ள தீர்த்தகுண்டத்தில் இறங்கி குளித்தபோது, திடீரென்று ரமேஷ் தண்ணீரில் மூழ்கினார். இதைப் பார்த்த அவரது நண்பர்கள் உடனே அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக ரமேசை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காருண்யா நகர் காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து இது கொலையா? என்ற கண்ணோட்டத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஈஷா யோகா நிர்வாக தரப்பில் கூறுவது:
“ஈஷா யோகா மையத்தில் உள்ள தீர்த்த குண்டத்தில் 4½ அடி ஆழத்தில் தான் தண்ணீர் இருக்கும். அதில் மூழ்கி குளித்தாலோ, நீச்சல் அடித்து குளித்தாலோ எந்தவித ஆபத்தும் ஏற்படாது.
வலிப்பு, ஆஸ்துமா, சிறுநீரக, இருதய நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை இருந்தால் தீர்த்த குண்டத்தில் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
தீர்த்தக் குண்டத்தில் இறங்கிய எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் ரமேசுக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. அவர் அதனை கவனத்தில் கொள்ளாமல் குளிக்க முயன்றபோது வலிப்பு நோய் வந்து நீரில் மூழ்கி உள்ளார். அவரை மீட்டு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக ஈஷா ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இது கவலை அளிக்க கூடியது என்று அவர்கள் கூறினார்கள்.
ஏற்கனவே காட்டை அளித்ததற்கும், அனுமதி மறுக்கப்பட்டும் கட்டிடங்களை கட்டியதற்கும், மக்கள் பிரச்சனைக்கு வராத மோடி ஜக்கி வாசுதேவின் சிலை திறப்புக்கு வந்ததற்கும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் நிலவி வரும் வேளையில், யோகா மையத்தில் மர்மமான முறையில் எஞ்சினியரிங் மாணவர் இறந்து கிடப்பது இன்னும் பல கேள்விகளை நம்மிடம் எழுப்பியுள்ளது.
இதில் பொதிந்து கிடக்கும் மர்மமும் விரைவில் வெளிவரும்.