
அதிமுக ஆட்சியில் வரலாறு காணாத வகையில் நிதி மேலாண்மை மிகவும் மோசமாகி விட்டதால் தமிழக அரசு கடனில் தத்தளிப்பதாக திமுக செயல் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2006-2011 வரையிலான திமுக ஆட்சியில், வெறும் ரூ.44 ஆயிரம் கோடி கடன் மட்டுமே ஏற்பட்டது.
ஆனால் 2011-2017 வரையிலான அதிமுக ஆட்சியில் மாநில அரசின் கடன் ரூ.2.59 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டதிலிருந்தே மாநில அரசின் நிதி நிர்வாகம் எந்த அளவிற்கு சீர்கெட்டுப் போயிருக்கிறது என்பது தெரிகிறது.
இதன் விளைவாக இன்றைக்கு அதிமுக ஆட்சியால் மட்டும் 1.56 லட்சம் கோடி ரூபாய் புதிய கடன் உருவாக்கப்பட்டு, மாநில அரசின் நிதி நிர்வாகம் நிலைகுலைந்து போய் நிற்கிறது.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக இருக்கட்டும், புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்குவதாக இருக்கட்டும் அனைத்து விஷயங்களிலும் நிதி பற்றாக்குறையால் அதிமுக அரசு திண்டாடிக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பருப்பு, பாமாயில் கொடுப்பதற்கு உரிய டெண்டர் விட்டு கொள்முதல் செய்ய கூட முடியாமல் அதிமுக ஆட்சி தத்தளிக்கிறது.
மின் வாரியத்தின் கடன் சுமையை ஏற்றுக் கொள்கிறோம் என்று அறிவித்துள்ள தமிழக அரசு அதற்குரிய மானியத்தைக் கூட மத்திய அரசிடமிருந்து பெறாமலேயே “உதய் திட்டத்தில்” கையெழுத்துப் போட்டு விட்டு அமைதி காக்கிறது.
ஆகவே அதிமுக அரசின் பொறுப்பற்ற நிதி நிர்வாகத்தால் மாநில அரசின் நிதி நிலை இன்றைக்கு தடம் புரண்டு நிற்பதோடு மட்டுமில்லாமல், தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ. 35 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை சுமத்தி உள்ளது.
இனி வரும் நிதிநிலை அறிக்கையிலாவது மாநிலத்தின் கடனை குறைப்பதற்கும், மாநில நிதி நிலைமையை சீராக்குவதற்கும் செயல் திட்டங்களை உருவாக்குவார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.