
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் சேகர் ரெட்டியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக 34 கோடிபுதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்த வழக்கில் ஓ.பன்னீர் செல்வதற்கு நெருக்கமாக இருந்த சேகர் ரெட்டி கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சேகர் ரெட்டியின் சகோதரரான சீனிவேலு மற்றும் பிரேம் குமார் ஆகியோரும் கைதாகினர்.
கைது செய்யப்பட்டு ஏறக்குறைய 80 நாட்களைக் கடந்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்ற வாதத்தை ஏற்றுக் கொண்ட சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றம் 86 நாட்களுக்குப் பிறகு மூவரையும் கடந்த 17 ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது.
ஆனால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு கிரீம்ஸ் சாலையில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு சேகர் ரெட்டியை வரவழைத்த அமலாக்கத்துறை அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தி அன்றைய தினமே சேகர் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ள அமலாக்கத்துறை சேகர்ரெட்டியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.