இன்றும் நாளையும், தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முன் தினம் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும், தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
காவிரி பிரச்சினை: தமிழகம் உச்ச நீதிமன்றம் செல்ல தேவையில்லை - டிகே சிவக்குமார்!
மீன்வர்களுக்கான எச்சரிக்கை :
தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இதனால் இன்றும் நாளையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. பாளையங்கோட்டையில் அதிகபட்ச வெப்பநிலை 39.9 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகி உள்ளது.