
திருவள்ளூர்
திருவள்ளூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயம், குடிநீர் பிரச்சனை தீரும் என்று விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டில் 74 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் அன்றிரவு கருமேகங்கள் சூழ்ந்து மழைப் பெய்யத் தொடங்கியது. சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருவள்ளூர், காக்களூர், கடம்பத்தூர், போளிவாக்கம், ஈக்காடு, பூண்டி, செவ்வாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் தூக்கமின்றி தவித்தனர்.
பலத்த மழைப் பெய்ததைத் தொடர்ந்து, திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் மக்காச்சோளம், நெல் நடவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயத்திற்கும், குடிநீர் தட்டுப்பாட்டுக்கும் தீர்வு கிடைக்கும் என்று விவசாயிகள், மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.