வீட்டுக்கு பக்கத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தால் மின் இணைப்பு தரமாட்டாங்க; பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…

First Published Oct 5, 2017, 6:35 AM IST
Highlights
If the bed is on the side of the threshold the power supply will not be given The girl is trying to fire ...


திருப்பூர்

திருப்பூரில் தன் வீட்டுக்குப் பக்கத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தால் தனக்கு மின் இணைப்பு கிடைக்காது என்று பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியம் பாப்பாங்குளம் ஊராட்சி காசிலிங்கம்பாளையம் பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்த பிரச்சனையைத் தீர்க்க வேண்டி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் மனுவும் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு அனுமதிப் பெற்று, காசிலிங்கம்பாளையத்தில் நீரூற்று பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் நேற்று காலை புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான ஆயத்தபணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, ஆழ்குழாய் கிணறு அமைய உள்ள இடத்தின் அருகில் வசிக்கும் குள்ளவேளாந்தோட்டத்தைச் சேர்ந்த அவினாசியப்பன் (50) மற்றும் அவருடைய மனைவி குப்புலட்சுமி (45) ஆகியோர் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மேலும், இங்கு ஆழ்குழாய் அமைத்தால், தங்களுக்கு மின் இணைப்பு கிடைக்காது என்றும், வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள் என்றும் ஊராட்சி ஒன்றிய ஊழியர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அவினாசி காவல் உதவி ஆய்வாளார் இலட்சுமணன், சேவூர் காவல் உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், மகுடேஸ்வரன் மற்றும் காவலாளர்கள் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து  அவினாசியப்பன் – குப்புலட்சுமி தம்பதியை சமரசம் செய்தனர்.

அப்போது, “நீங்கள் 7 ஆண்டுக்கு முன்பு மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்துள்ளீர்கள். உங்களுக்கு முறைப்படி மின் இணைப்பு கிடைக்கும். அரசு சார்பில் அமைக்கப்படும் இந்த ஆழ்குழாய் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே எவ்வித இடையூறும் செய்யக்கூடாது” என்று கூறினர்.

அதற்கு, “நீங்கள் எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுங்கள்” என்று குப்புலட்சுமி வாக்குவாதம் செய்தார்.

அதற்கு, “எழுத்துப் பூர்வமாக எதுவும் எழுதி கொடுக்க முடியாது. அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று காவலாளர்களும், அதிகாரிகளும் எச்சரித்தனர்.

இதனால் மனமுடைந்த குப்புலட்சுமி, அங்குள்ள புதர் மறைவில் பிளாஸ்டிக் கேனில் தயாராக வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை சற்றும் எதிர்பாராத காவலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றியதுடன், அவருடைய உடலில் தண்ணீரை ஊற்றி, தீக்குளிக்கும் முயற்சியை காவலாளர்கள் தடுத்தனர்.

இதனையடுத்து, அவினாசியப்பனிடம் மீண்டும் அதிகாரிகள் விளக்கம் கூறி உங்களுக்கு மின் இணைப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று வாய்மொழி உறுதி தந்தனர்.

பின்னர் காவலர் பாதுகாப்புடன் அந்த இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.

click me!