
இளைஞர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகதீஷ்வரன் (20) என்பவர் சாலையில் நடந்து செல்லும் போது ஜூன் 1ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரகதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
30 நிமிடத்தில் அடுத்த கொலை
இந்த கொலை சம்பவம் நடந்த 30 நிமிடத்தில் புதுக்கிராமம் சென்பகா நகரைச் சேர்ந்த 3வது தெருவைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை தடுக்க முயன்ற செண்பகராஜ் (44) என்பவருக்கும் அரிவாள் வெட்டி விழுந்தது. படுகாயமடைந்த செண்பகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
6 தனிப்படைகள் அமைப்பு
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பிரகதீஷ்வரன் கொலை தொடர்பாக செண்பகா நகர் சதீஷ் மாதவன் (26), சிந்தாமணி நகர் செல்லத்துரை (26), பசுவந்தனை பொம்மையாபுரம் வேலு முனியசாமி (19), புதுக்கிராமம் முகமது சாலிஹாபுரம் மதன்குமார் (20), வடக்கு திட்டங்குளம் கனகராஜ் (24), செண்பகவல்லி நகர் அர்ஜுன் (24), சிந்தாமணி நகர் சுரேஷ் (24) வஉசி நகரை சேர்ந்த விக்னேஷ் (24) ஆகிய 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சதீஷ் மாதவன் கும்பல் கோவில் வளாகத்தில் அமர்ந்து மது அருந்துவதை தட்டிக்கேட்டதால் பிரகதீஷ்வரனை கொலை செய்தது தெரியவந்தது.
16 வயது சிறுவன் உட்பட 14 பேர் கைது
பதிலுக்கு பிரகதீஷ்வரனின் ஆதரவு கோஷ்டியினர், புதுக்கிராமம் சென்பகா நகரில் உள்ள சதீஷ் மாதவனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அவர் வீட்டில் இல்லாததால் அவரை தாய் கஸ்தூரியை வீட்டு வாசலில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் உட்பட இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.