ஜனவரி 17-ம் தேதியில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்தப் போட்டிகளை நடக்குமென அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி 16 ஆம் தேதிதான் மாட்டுப்பொங்கல் என்றாலும்கூட, அது தற்போது தள்ளிப்போயுள்ளது. இதன் பின்னணியில், “ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அதனாலேயே அன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஜனவரி 10ஆம் தேதி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 300 வீரர்கள், 150 பார்வையாளர்கள் மற்றும் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள், மாடு வளர்ப்போர் 2 தவணைத் தடுப்பூசியும் செலுத்தி இருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து போட்டிகள் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
மேற்கண்ட அரசின் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். கொரோனா தொற்று குறைந்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஜனவரி14ம் தேதி முதல் 18ம் தேதி வரை பண்டிகை காலத்தில் மதுகடைகளை திறக்க அனுமதியளித்ததை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார். எனவே ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்படுமா ? என்ற கேள்வி தற்போது அனைவரிடமும் எழுந்து இருக்கிறது.