பழனி முருகன் கோவிலில், நாளை மறுநாள் முதல் வருகிற 18-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஜனவரி 31-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
ஜனவரி 18-ந் தேதியன்று தைப்பூசம் என்பதால் முருகன் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் என்ன செய்வார்கள் என்கிற குழப்பம் இருந்தது. இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் ஜனவரி 18-ந் தேதி தைப்பூச நாளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பழனி முருகன் கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 21-ந்தேதி வரை தைப்பூச திருவிழா நடைபெறுகிறது.
கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருவிழா நடத்தப்பட உள்ளது. அதன்படி பழனி முருகன் கோவில் மற்றும் உபகோவில்களில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 18-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று தைப்பூச திருவிழா கொடியேற்றம், பக்தர்கள் கலந்து கொள்ளாமல் கோவில் மூலம் நடத்தப்படும்.
இதேபோல் தைப்பூச திருவிழாவின் 10 நாட்களும் மண்டகப்படிதாரர்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து மண்டகப்படிகளும் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு கோவில் மூலம் நடத்தப்படும். வருகிற 17-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதோடு வெள்ளி ரதம் புறப்பாட்டுக்கு பதிலாக கோவில் வளாகத்தில் வெள்ளிமயில் வாகனத்தில் சாமி புறப்பாடு கோவில் பணியாளர்களால் நடத்தப்படும்.
இதுமட்டுமின்றி வருகி ற18-ந்தேதி தைப்பூச திருநாளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மாலை 4.45 மணிக்கு சிறிய மரத்தேரில் கோவில் வளாகத்தில் கோவில் பணியாளர்களை கொண்டு தேரோட்டம் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து, 21-ந்தேதி கோவில் வளாகத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். அதிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகள் கோவில் வலைத்தளம், யூ-டியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்’ என்று அறிவித்து உள்ளார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்.