“ செந்தில் பாலாஜியை கைது செய்ய இதுதான் காரணம்.. ஆனா பாஜக நினைப்பது நடக்காது” டி.ஆர். பாலு பேச்சு

By Ramya sFirst Published Jun 16, 2023, 11:05 PM IST
Highlights

கொங்கு மண்டலத்தில் இருந்து செந்தில் பாலாஜியை அப்புறப்படுத்தவே அவர் கைது செய்யப்பட்டதாக டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இரத்த நாளத்தில் அடைப்புகள் உள்ளதாகவும், பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள நிலையில், அவருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பைபாஸ் சர்ஜரி நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனை பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கூறி வருகின்றனர். மறுபுறம், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இதனை ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி வருகின்றன.

 

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

இந்த சூழலில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் இன்று கோவை சிவானந்தா காலனியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு எம்.பி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு “ செந்தில் பாலாஜி 5 முறை எம்.எல்.ஏவாகவும், 2 முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அமலாக்கத்துறை அவரிடம் அத்துமீறி நடந்துள்ளது. சம்மன் கொடுக்காமல் அவரை கைது செய்துள்ளது. கைது நடவடிக்கையின் போது, அமலாக்கத்துறையினர் மிக மிக கொடுமையாக நடந்துள்ளனர். இதுபற்றி நேரம் வரும் போது நீதிமன்றத்தில் தெரிவிப்போம். சம்பவத்தின் போது செந்தில் பாலாஜிக்கு அதிகமாக வியர்த்துள்ளது. காற்று வாங்குவதற்காக வெளியே சென்று, சம்ப் மீது அமர்ந்த அவர், கீழே விழுந்து துடித்துள்ளார். அவர் நடிப்பதாக நினைத்த அமலாக்கத்துறையினர், அவரது கால் தலையை பிடித்து தூக்கி உள்ளனர். ஆனால் தலையை பிடித்து தூக்கியவர், திடீரென போட்டுவிட்டதால் அவரது தலை கான்கிரீட் ஸ்லாப்பில் முட்டி அடிபட்டுள்ளது.

இதனால் அமலாக்கத்துறையினர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில் பாலாஜி மீது பண மோசடி குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவில் சேர்த்தால் தான் ஜாமீனில் வெளியே வர முடியாது. இதற்காக அமலாக்கத்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கொங்கு மண்டலத்தில் மட்டும் 11 தொகுதிகள் உள்ளன. கொங்கு மண்டலத்தில் முக்கிய தலைவராக அடையாளம் காணப்படும் செந்தில் பாலாஜியை, தேர்தல் சீனில் இருந்து அகற்றவே அவரை கைது செய்துள்ளனர். செந்தில் பாலாஜியை அப்புறப்படுத்திவிட்டு 11 தொகுதிகளில் ஜெயித்துவிடலாம் என்று பாஜகவினர் கனவு காண்கின்றனர். ஆனால் இது பகல் கனவு. மாறாக செந்தில் பாலாஜியின் செயல்திறனால் அனைவரும் வீழ்த்தப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 8 நாட்கள் விசாரிக்கலாம்.. ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

click me!