
நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் தமிழக அரசியலுக்கு புதிது அல்ல. ஆனால் சில ஆண்டுகளாக அரசியல் பேச்சை எடுத்தாலே, நல்ல கேள்வி…! அடுத்த கேள்வி...! என பேசிய பல நடிகர்களும், இன்று அரசியல் அவதாரம் எடுத்திருக்கின்றனர். தமிழக அரசியலில் தற்போது நிலவும் வெற்றிடத்தை நிரப்ப போவது யார்? எனும் எதிர் பார்ப்புடன் மக்களும், இந்த புது வரவுகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ரஜினி, கமல் போன்றோரும் தங்கள் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்திருக்கின்றனர். கமல் கட்சியே தொடங்கி விட்டார். இந்நிலையில் தற்போது வேறு ஒரு நடிகரும் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்திருக்கிறார்.
பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பவர். சென்னையில் வைத்து நடந்த பொது நிகழ்வு ஒன்றில் பார்த்திபன் இதை தெரிவித்திருக்கிறார். சென்னையில் பிளாஸ்டிக் இல்லா கடற்கரையை உருவாக்கி, கடல் வளத்தை பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மீனவர்களுக்கான படகுப்போட்டி நடத்தப்பட்டது.
அந்த போட்டியில் வெற்றிபெற்றோருக்கு பரிசு வழங்கிய பார்த்திபன், பின்னர் அளித்த பேட்டியின் போது, அரசியலுக்கு வருவதற்கு தனக்கு இருக்கும் ஈடுபாட்டை பத்திரிக்கையாளர் மத்தியில் தெரிவித்திருக்கிறார்.