
திருவள்ளூர்
திருவள்ளூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி பெரியவண்ணான்குப்பம் - தண்டலம் சாலையில் மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரியவண்ணான்குப்பம் கிராமத்தில் 3000 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் எந்தவொரு பொருள் வாங்க வேண்டும் என்றாலும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள தண்டலம் செல்ல வேண்டும்.
பெரியவண்ணான்குப்பம் - தண்டலம் இடையே உள்ள சாலை அடிக்கடி பெய்துவரும் கனமழைக்கு குண்டும், குழியுமாக மாறிவிடும்.
பெரியவண்ணான்குப்பம் கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயிகள். இவர்கள் தங்களது விளைபொருட்களை தண்டலம் கொண்டுச்சென்று அங்கிருந்து புறப்படும் பேருந்துகளில் ஊத்துக்கோட்டை மற்றும் மற்ற பகுதிகளுக்கு கொண்டுச்சென்று விற்கின்றனர்.
குண்டும் குழியுமான சாலையால் தக்க நேரத்தில் விளைப் பொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமல் பெருத்த நட்டத்தை அடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் நேற்று காலை தி.மு.க. கிளை செயலாளர் ஆனந்தன் தலைமையில் பெரியவண்ணான்குப்பம் - தண்டலம் சாலையில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன், ஆய்வாளர் பாலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.
"சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.