
திருவாரூர்
நீட் தேர்வை எதிர்த்து வாகன பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திராவிடர் கழக இளைஞரணி திருவாரூர் வந்து தங்களது பிரச்சாரத்தை தொடர்ந்தனர்.
தமிழகம் முழவதும், நீட் தேர்வை எதிர்த்து வாகன பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர் திராவிடர் கழக இளைஞரணி. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் கல்வி சீர் குலையும் என்றும் இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
மேலும், நீட் தேர்வை எதிர்த்து மக்களை திரட்டும் முயற்சியில் திக இளைஞரணி இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் நீட் தேர்வின் விளைவுகளை மக்களிடையே கொண்டு செல்ல, வாகன பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.
அந்த பயணக்குழு நேற்று திருவாரூர் வந்தனர். அவர்கள், திருவாரூர் பேருந்து நிலையம் அருகே நடத்திய பிரச்சாரக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.
மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் மோகன், மாநில மகளிர் பாசறை செயலாளர் செந்தமிழ்செல்வி, மண்டல தலைவர் கோபால், மண்டல செயலாளர் முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தி.மு.க நகர செயலாளர் வாரைபிரகாஷ், ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா, தி.க மாவட்ட துணை செயலாளர் அருண்காந்தி, பகுத்தறிவு பேரவை நிர்வாகி சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது, நீட் தேர்வை எதிர்த்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். பின்னர் திருவாரூரில் இருந்து புறப்பட்டு குடவாசல், கும்பகோணம் வழியாக விருத்தாசலம் சென்றனர்.