திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நாளை நடைபெற உள்ள நிலையில், 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
புகழ்பெற்ற சிவத்தலங்களுள் ‘திருவண்ணாமலையும்’ ஒன்று. சிவபெருமானை ‘அக்னி’ வடிவில் இருக்க கூடிய தலமும் இதுவாகும். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் தீபத் திருவிழா கடந்த நவம்பர் 10 ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.நாளை நவம்பர் 19 அன்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
undefined
தீபத் திருவிழாவின் நிறைவு நாளான நவம்பர் 19ஆம் தேதியான, நாளை அதிகாலை 4 மணிக்கு திருக்கோவிலில் அண்ணாமலையார் கருவறையின் முன்பு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இந்த திருவிழாவிற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆன்மீக பக்தர்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று அதிகாலை திருக்கோவிலினுள், பத்தாம் நாளான நாளை மாலை தீப மலையின் மீது ஏற்றப்படும் மகா தீபத்தை முன்னிட்டு, தீபக் கொப்பரைக்கு, சிறிய நந்தி சந்நதிக்கு முன்பு சிறப்பு பூஜைகள் விமர்சையாக செய்யப்பட்டது.
பிறகு, ஊழியர்கள் 15 பேர் மூலமாக 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியின் மீது மகாதீப கொப்பரையை தோளில் சுமந்தபடி சென்றனர். 5.9 அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்ட இந்த மகா தீப கொப்பரையானது பஞ்சலோகத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று அடுக்குகளாக செய்யப்பட்டது. மகாதீப கொப்பரையில் ஆன்மீக பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் 3,500 லிட்டர் நெய் மற்றும் 1000 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
குறிப்பாக சிவனும் சக்தியும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் நாளை மாலை காட்சி அளித்த பின்பு சரியாக மாலை 6 மணிக்கு இந்த மகா தீபக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும்.கொரோனா தொற்று காரணமாக நவம்பர் 17 முதல் 20 ஆம் தேதி யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தீப விழாவையொட்டி திருவண்ணாமலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.