கொட்டித் தீர்க்கப்போகும் அதிகன மழை… 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!! | Tamilnadu Rain

By Narendran SFirst Published Nov 18, 2021, 12:09 PM IST
Highlights

#Tamilnadu Rain | தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் தேங்கி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது வெள்ள நீர் வடிந்து மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 13 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தென்கிழக்குத் திசையிலும், புதுச்சேரியில் இருந்து 300 கிலோ மீட்டர் கிழக்கு, தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது. தற்போது கிழக்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரும் என்று கூறப்பட்டுள்ளது.

வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்கிறது. இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதிகளிலும் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறாது என்று நேற்று வரை கணிக்கப்பட்ட நிலையில் இன்று அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நகர்ந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புதுச்சேரியில் இருந்து 300கிமீ கிழக்கு - தென் கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது.

சென்னையில் இருந்து 340 கிமீ தென் கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் போது மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கக் கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் ஆகிய பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு, அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு-புதுச்சேரி-தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையோரங்களில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலிலும், தமிழ்நாடு-புதுச்சேரி-தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் இருப்பதால், மீனவர்கள் நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

click me!