தர்மேந்திர பிரதானை அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனே நீக்கனும்.! இறங்கி அடிக்கும் திருமாவளவன்

Published : Mar 11, 2025, 07:54 AM ISTUpdated : Mar 11, 2025, 08:02 AM IST
தர்மேந்திர பிரதானை அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனே நீக்கனும்.! இறங்கி அடிக்கும் திருமாவளவன்

சுருக்கம்

தர்மேந்திர பிரதான் அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களை இழிவுபடுத்தியதால் அவர் பதவிக்கு தகுதியற்றவர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழக எம்பிக்களை விமர்சித்த மத்திய அமைச்சர்

தமிழ்த் தேசியப் பேரினத்தை இழிவு படுத்திய தர்மேந்திர பிரதான் அவர்களை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ‘சனநாயகமற்றவர்கள்’ ‘அநாகரிகமானவர்கள்’ என்று இழிவு படுத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.  

நிதியை தராமல் ஏமாற்றும் நீங்கள்! எங்க MP.க்களை பார்த்து அநாகரிகமானவர்கள் எப்படி சொல்லுவீங்க! முதல்வர் ஸ்டாலின்

மத்திய அமைச்சரோடு சந்திப்பு நடந்தது என்ன.?

நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவலை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்.  2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சேர்ந்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைச் சந்தித்தார். அந்தக் குழுவில் விசிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இடம் பெற்றிருந்தோம். அப்போது, ‘ தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று வெளிப்படையாக நீங்கள் சொல்வதால் எங்களுக்கு அரசியல் ரீதியான சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பிஎம் ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக் கொள்கிறோம் எனப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுங்கள்.

பிஎம்ஶ்ரீ பள்ளிகளையும் நாங்கள் ஏற்க முடியாது

அதன் பிறகு நீங்கள் அதை நிறைவேற்றவில்லை என்றாலும் எங்களுக்குப் பிரச்சனை இல்லை ‘ -என தர்மேந்திர பிரதான் அவர்கள் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார். அப்போது, “ நாங்கள் நவோதயா பள்ளிகளையும் ஏற்கவில்லை. மும்மொழி கொள்கையையும் தமிழ்நாடு எப்போதுமே ஏற்றதில்லை. எனவே, இந்தி கட்டாயம் என்கிற பிஎம்ஶ்ரீ பள்ளிகளையும் நாங்கள் ஏற்க முடியாது. அதனை வற்புறுத்தாமல் வழக்கமாக தரப்படும் "சமகரா சிக்ஷாவுக்கான" நிதியைத் தான் விடுவியுங்கள் என்று கேட்கிறோம். எங்களுக்கு பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கான நிதி தேவையில்லை”  என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.  நாங்களும் அமைச்சரிடம் அதையே வலியுறுத்திக் கேட்டோம். ஆனால், அவர் அவ்வாறு நிதியை விடுவிக்க உடன்படவில்லை. 

யார் அந்த சூப்பர் முதல்வர்? திமுக யூ-டர்ன் அடித்தது ஏன்?: அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி

சூப்பர் முதலமைச்சர் யார்?

இந்த விவரங்கள் யாவும் அன்றைய நாளிலேயே ஊடகங்களில் வெளியாகி உள்ளன. உண்மை இப்படியிருக்க அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஏதோ தமிழ்நாடு அரசு பிஎம் ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஒப்புதல் அளித்தது போலவும், அதன் பிறகு பின்வாங்கிக் கொண்டது போலவும் மக்களவையில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி முதலமைச்சர் ஒப்புக்கொண்டார் அவர் ஒப்புக்கொண்ட பிறகு அந்த முடிவை மாற்றச் செய்த சூப்பர் முதலமைச்சர் யார்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது அப்பட்டமான பொய் மட்டுமல்ல; அவதூறான செய்தியும் ஆகும். 

 ‘சனநாயகம் அற்றவர்கள்’ ‘அநாகரிகமானவர்கள்’

அவ்வாறு அவதூறு பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு மறுப்பு தெரிவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களை  ‘சனநாயகம் அற்றவர்கள்’ ‘அநாகரிகமானவர்கள்’ என்று இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். அவரது அநாகரிகமான பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, தான் அப்படி பேசவில்லை என்றும், தான் பேசியது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார். அவர் பேசிய வார்த்தைகள் நாடாளுமன்ற மக்களவைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உள்ளன. பல்வேறு ஊடகங்களிலும் அவை அப்போதே வெளியாகியுள்ளன. 

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிடுக

மக்களவையின் மரபை மீறி உண்மைக்கு மாறான செய்திகளைப் பதிவு செய்தது மட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்தியதன் மூலம் தமிழ்த்தேசியப் பேரினத்தையே அவமதித்திருக்கிறார். இந்நிலையில், தர்மேந்திர பிரதான் அவர்கள் அந்தப் பதவியில் நீடிப்பதற்குத் தகுதியானவர் அல்ல. அவரை உடனடியாகக் கல்வி அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். அத்துடன்,  தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய சமக்ரா சிக்‌ஷா கல்விக்கான நிதியை சட்டத்துக்குப் புறம்பாக முடக்கி வைத்திருக்கும் ஒன்றிய அரசு உடனடியாக அந்த நிதியை விடுவிக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம் எனத் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SSLC Mark Sheet Corrections: 10-வது மதிப்பெண் சான்றிதழில் பிழையா? திருத்தம் செய்வது எப்படி? அரசு தேர்வுகள் முக்கிய அப்டேட்!
Latha Rajinikanth: அண்ணாமலைக்கு போட்டியாக புதிய இயக்கம்? அரசியலில் குதிக்கிறாரா லதா ரஜினிகாந்த்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்.!