தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பயங்கரம் - பாய்லர் வெடித்து 2 பேர் பலி : மேலும் 2 பேர் படுகாயம்

First Published Oct 17, 2016, 10:34 PM IST
Highlights


தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்துச் சிதறியதில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் கடந்த 1979ம் ஆண்டு துவக்கப்பட்டது. இங்கு 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் மூலம் மொத்தம் 1050 யூனிட் மின் உற்பத்தி நடக்கிறது.
நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலத்தை தாண்டி இவை இயங்குவதால் அடிக்கடி பழுது ஏற்படுவதுடன் விபத்துகளும் நடக்கிறது. இதனால், அவற்றை சீரமைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று, இங்குள்ள 5வது  யூனிட்டில் வழக்கம்போல் மின் உற்பத்தி நடந்தது. மாலையில் பாய்லர் பகுதியில் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 5.30 மணியளவில் அங்குள்ள பாய்லரில் இருந்து  தண்ணீர் கொண்டு செல்லும் ஸ்டீம் லைன் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
அதிலிருந்த கொதிக்கும் வெந்நீர் மற்றும் நீராவி சிதறி தொழிலாளர்கள் மீது கொட்டியது. இதில் ஒப்பந்த ஊழியர்களான ஆறுமுகம் (40), முருகப்பெருமாள் (22) ஆகியோர் உடல் வெந்து  சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும்  மதுரை அடுத்த சமயநல்லூரைச்  சேர்ந்த தொழில்நுட்ப உதவியாளர் செய்யது உமர் (27) என்பவரது கை வெந்தது.  மற்றொரு ஊழியரான விக்னேஷ் (27) என்பவரும் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து தெர்மல் அனல் மின் நிலைய தலைமை பொறியாளர் தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் வெண்ணிற புகை மண்டலம் சூழ்ந்தது.
தெர்மல்நகர் போலீசார், சடலங்களை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். படுகாயமடைந்த செய்யது உமரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், விக்னேஷை அழகேசபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். இந்த திடீர் விபத்தால் 5வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. விபத்து குறித்து தெர்மல்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

click me!