காவிரி மேலாண்மை வாரியம் - தமிழகத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம்

 
Published : Oct 17, 2016, 09:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
காவிரி மேலாண்மை வாரியம் - தமிழகத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம்

சுருக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு கடந்த மாதம் 30ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4ம் தேதிக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், மத்திய அக்டோபர் 3ம் தேதி மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று தெரிவித்ததுடன், நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும் என்றும் கூறி யது.
மத்திய அரசின் இந்த திடீர் முடிவால், தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் தற்போது 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில், கர்நாடக அரசு உரிய அளவில் தண்ணீர் திறந்துவிடாததால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.
எனவே, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி வருகின்றன. ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, கடந்த 6ம் தேதி சென்னையில் தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக் கத்தினர் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் அக்டோபர் 17 (இன்று), 18ம் தேதிகளில் (நாளை) தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா., ம.தி.மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ஙட, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், புதிய தமிழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்கள், முக்கிய நகரங்கள் என மொத்தம் 200 இடங்களில் இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்கின்றனர். இதில், ஏதாவது ஒரு இடத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினும் கலந்துகொள்வார் என தெரிகிறது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை சென்ட்ரலில் இன்றும், எழும்பூரில் நாளையும் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சாவூரில் நாளை நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை பேசின்பிரிட்ஜில் நாளை நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் பங்குகொள்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான தா.பாண்டியன் தென்சென்னையிலும், இரா.முத்தரசன் திருவாரூரிலும் இன்று ரயில் மறியலில் ஈடுபடுகிறார்கள்.
தொடர்ந்து, 48 மணி நேரம் இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்பதால், ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. என்றாலும், ரயில் போக்குவரத்தை வழக்கம் போல் நடத்த ரயில்வே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்பட தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மோட்டர் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்.! கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் விடுமுறை!