
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என்றும் இயல்பை விட 3 அல்லது 4 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதையடுத்து மாநிலம் முழுவதும் கடுமையான வறிட்சி ஏற்பட்டுள்ளது, நீர் நிலைகள் வறண்டு போய் உள்ளன.இந்த கடும் வறட்சியால் வெப்பமும் மிக அதிகமாக காணப்படுகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கடுமையான வெயில் நிலவுகிறது.
இந்நிலையில் சென்னை செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், தற்போது ஆந்திர பகுதிகளில் தீவிர வெப்பநிலை நிலவுகிறது. இதனால், பல இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் பதிவானதாக தெரிவித்தார்.
அங்கிருந்து வடமேற்கு காற்று தமிழகத்தை நோக்கி வீசுவதால், உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக தெரிவித்தார்.
திருத்தணியில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் நிலவுகிறது. அங்கு அதிகபட்சமாக திருத்தணியில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
தமிழகத்தில் இதே வெப்பநிலை 2 நாளுக்கு தொடர்ந்து நீடிக்கும் என்றும் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இயக்குநர் தெரிவித்தார்.