
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நான்கு மாதங்களாக தண்ணீர் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளான மக்களின் புகாருக்கு அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் சினம் கொண்ட மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், சீரான குடிநீர் விநியோகமும் செய்யப்படவில்லை.
இங்கு நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று மக்கள் ஆரணி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த புகார்கள் யாவும் கிணற்றில் போட்ட கல்லாகவே எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
அதிகாரிகளின் அலட்சியத்தால் சினம் கொண்ட மக்கள் தங்களுக்கு குடிநீர் வழங்கியே ஆகணும் என்று வெற்றுக் குடங்களுடன் நேற்று சங்கீதவாடி கிராமத்தில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் தாசில்தார் ஆ.சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, பரணிதரன் மற்றும் தாலுகா காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீர் வழங்க உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் மக்கள் சிறைபிடித்த பேருந்தை விடுவித்தனர். போராட்டத்தையும் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.