
திருவள்ளூர்
திருவள்ளூரில் சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 28 மூட்டை ரேசன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஆந்திராவைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் கிராமத்தில் இருந்து ரேசன் அரிசி மூட்டைகள் ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாகவும், அந்த மூட்டைகள சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்படி கும்மிடிப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையில் கவரைப்பேட்டை காவலாளர்களை சம்பவ இடத்தில் சென்று விசாரிக்கும் படி உத்தரவிட்டார்.
காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு தலா 50 கிலோ எடை கொண்ட 28 மூட்டை ரேசன் அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர், காவலாளர்கள் அந்த 28 மூட்டை ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கவரப்பேட்டை காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியைச் சேர்ந்த மல்லிகா அர்சுணா (25) மற்றும் நாகேந்திரகுமார் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆந்திரவைச் சேர்ந்த இருவரிடமும் விசாரனை நடந்து வருகின்றது.