
மடியில கனமில்லை…வழியில பயமில்லை…குட்கா பிரச்சனையில தொடர்பும் இல்லை… அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி விளக்கம்…
தனது அரசியல் எதிரிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக தம் மீது அபாண்டமாக பழி சுமத்தி வருவதாகவும், குட்கா பிரச்சனையில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அரசால் தடை செய்யப்பட்ட, உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய மாவா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களை சமூகவிரோதிகள் சென்னை காவல் துறையைச் சார்ந்த சில அதிகாரிகள் துணையோடு விற்கவும், தயாரிக்கவும், எல்லாப் பகுதிகளுக்கும் அதனை பிரித்து அனுப்புவதாகவும் தகவல் பெறப்பட்டதாக தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு காவல் துறை ஆணையர் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த விவகாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சருக்கும் தொடர்பிருக்கிறது, எனவே சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இப்பிரச்சனை குறித்து அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், விளக்கம் அளித்துள்ளார். அதில், குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் குறித்து உண்மைக்கு மாறான பல கருத்துக்கள் தனக்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஒரு சில நபர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை தயாரிக்கவும், சேமிக்கவும், விற்பனை செய்யவும் தடைவிதித்து 2கடந்த 2013 ஆம்ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் இரயில்வே
குட்கா மற்றும் பான் மசாலாவின் மீதான தடையாணை தொடர்நது தற்போது வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
குட்கா பிரச்சனை தொடர்பாக நாளேடுகளிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள மாதவ்ராவ் என்பவரை தான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே இதுவரை சந்தித்தது இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர். என்னை பிடிக்காத சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தவறாக பரப்பி என்னை அழித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற பல பிரச்சினைகளை தனது அரசியல் வாழ்வில் பல முறை ஏற்பட்டபோதும் அவற்றையெல்லாம் கடந்து தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு மடியில் கனமில்லை எனவே, வழியில் பயமில்லை. இந்த பிரச்சினையையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.