நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்னும் 3 நாட்களில் முடிவடையவுள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லாதது தமிழகத்தில ்பாஜக கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவின் தேர்தல் அறிக்கை
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தநிலையில் பாஜக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில், நாடு முழுவதும் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும். 2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை.
70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் . 2025ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என பலவித அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
கச்சத்தீவு அறிவிப்பு என்ன ஆச்சு.?
ஆனால் தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கச்சத்தீவு மீட்பு தொடர்பாக எந்தவித அறிவிப்பு வெளியிடாதது தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியினரை அதிருப்தி அடைய செய்துள்ளது. ராமேஸ்வரம் மற்றும் இலங்கைக்கு இடையில் அமைந்திருக்கும் கச்சத்தீவினை பாரம்பரியமாக தமிழக, இலங்கை மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவினை இலங்கை அரசின் பகுதியாக அங்கீகரித்தார். இந்தநிலையில் பிரதமர் மோடி கச்சத்தீவு விவகாரத்தை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கையில் எடுத்தால், அதில் 1974-ம் ஆண்டு இந்திரா காந்தி அரசு கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைத்தது. அவர்கள் அரசியலுக்காக பாரத மாதாவை மூன்றாகப் பிரித்தனர் எனக் கூறியிருந்தார்.
மோடி வாக்குறுதி கொடுப்பாரா.?
மேலும் கடந்த காலத்தில் திமுக செய்த பாவத்தினால் தான் தமிழக மீனவர்கள் இலங்கையிடமிருந்து இன்னல்களை சந்திக்கின்றனர் என விமர்சித்திருந்தார். இதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் பதிலடி கொடுத்தது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, கச்சத்தீவை பாஜக அரசு மீட்கும் என அறிவித்திருந்தார். ஆனால் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு தொடர்பாக எந்த ஒரு வார்த்தையும் இடம்பெறாதது தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியினரை அதிருப்தி அடைய செய்துள்ளது. எனவே இன்று தமிழகம் வரும் மோடி கச்சத்தீவு தொடர்பாக வாக்குறுதியை அளிப்பார் என பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
அப்படிபோடு.! பாஜக தேர்தல் அறிக்கையில் இத்தனை சிறப்பு அம்சங்களா? லிட்ஸ் போட்ட பிரதமர் மோடி!