ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் பணம் சிக்கியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு 3 ஷிப்டுகளாக இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே பாஜக நிர்வாகி ஜவஹர் குமார் என்பவரது வீட்டில் இருந்து ரூ.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் சிக்கியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளராக இருக்கும் இவரது வீட்டில் பணம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அதில், ரூ.500 கட்டுகளாக ரூ.31 லட்சம் அவரது வீட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த பணத்தை ஒப்படைப்பதில் சிக்கல் இருக்கவே, அந்த தொகுதியை சேர்ந்த பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில், அங்கு வந்த அவர்களிடம் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கைப்பற்றப்பட்ட பணம், ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருடையது என்பதும், கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் பாஜக நிர்வாகியிடம் பணத்தை அவர் ஒப்படைத்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
ஈரோடு தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், மொடக்குறுச்சி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகன். பாஜகவை சேர்ந்த அவர், அதிமுகவில் அண்மையில் சேர்ந்தவர். பாஜகவில் இருந்தபோதே அந்த தொகுதியை குறி வைத்து ஏராளமான பணிகளை செய்து வந்தார். இவரது சொத்து மதிப்பும் அதிகம் என்பதால், தொடர் கண்காணிப்பு வளையத்தில் இருந்து வருகிறார்.
பாஜகவில் இருந்தபோது, ஆற்றல் அசோக்குமாரிடம், ஜவஹர் நம்பிக்கைக்கு உரியவராக இருந்துள்ளதாக தெரிகிறது. அறக்கட்டளை பொறுப்பு போன்றவற்றை கவனித்து வந்துள்ளார். அதிமுகவில் சேர்ந்த பின்னரும் பாஜக நிர்வாகிகளிடம் ஆற்றல் அசோக்குமார் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில், தனது நம்பிக்கைக்கு உரியவராக இருந்த ஜவஹரிடம் அவர் பணத்தை கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கைப்பற்ற பணத்திற்கு அவர் சரியான ஆவணங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் அந்த பணம் அவரிடமே திரும்ப ஒப்படைக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஈரோடு தொகுதியில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுவதால், வெற்றி வாய்ப்புக்காக இரு கட்சி நிர்வாகிகளுமே கடுமையாக பணியாற்றி வருகின்றன. ஒருவரையொருவர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், திமுகவினர் கொடுத்த தகவலின் பேரிலேயே போலீசார் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.