
ஆவின் விற்பனை மையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அங்கு ஒரு பெட்டியில் ஏராளமான பீர் பாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் விற்பனை மையங்களில் விற்பனை செய்யும் பொருட்கள் காலாவதியானதாகவும், கலப்படம் உள்ளதாகவும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இந்நிலையில், வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஆவின் பால் விற்பனை மையத்துக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்கு இருந்த பொருட்களை ஆய்வு செய்தபோது ஒரு பெட்டி யில் பீர் பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதை தொடர்ந்து ஆவின் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், மேற்கண்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் குழுவினர், அங்கு சென்ற விசாரணை நடத்தினர். பின்னர், ஆவின் விற்பனை மையத்தின் உரிமத்தை ரத்து செய்தனர்.
இதுகுறித்து ஆவின் பொது மேலாளர் அருள்ஜோதி அரசன் கூறும்போது, ‘‘எங்களுக்கு கிடைத்த தகவலின்படி விசாரணை நடத்தினோம். அதன் முடிவில் பால் விற்பனையகத்தின் உரிமம் ரத்து செய்தோம். இனி ஆவின் விற்பனை மையத்தை ஆவின் நிர்வாகமே தொடர்ந்து நடத்தும்.
ஆவின் விற்பனை மையத்தில் மது பாட்டில்களை கைப்பற்றியுள்ளோம். இதுபற்றி வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். போலீசாரின் விசாரணை முடிந்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.